MENU
  • முகப்பு
  • ஆலய விபரம்
    • ஆலய வரலாறு
    • நிகழ்ந்த அற்புதங்கள்
    • நிகழ்ச்சிகள்
  • திருவிவிலியம்
  • செபங்கள்
  • காட்சியகம்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • மறைக்கல்வி
  • Ministries
    • Don Bosco Kids Ministries
  • தொடர்பு

சமாதானத்திற்கான செபம்

ஆண்டவரே,
என்னை உம்முடைய சமாதானத்தின் தூதனாக மாற்றியருளும் ; பகையுள்ள இடத்தில் பாசத்தையும் ; துரோகம் உள்ள இடத்தில் மன்னிப்பையும் ; சந்தேகம் உள்ள இடத்தில் விசுவாசத்தையும் ; அவ நம்பிக்கை உள்ள இடத்தில் நம்பிக்கையையும் ; இருள் சூழ்ந்த இடத்தில் ஒளியையும் ; துக்கம் நிறைந்த இடத்தில் மகிழ்ச்சியையும் ; நான் விதைத்தருள அருள் தாரும்.

அன்பு தெய்வமே,
ஆறுதல் பெறுவதைவிட, ஆறுதல் அளிக்கவும் ; புரிந்துகொள்ள விரும்புவதைவிட புரிந்து கொள்ளவும் ; அன்பு செய்யப்பட விரும்புவதை விட அன்பு செய்யவும் ; எனக்கு ஆற்றல் தாரும். ஏனெனில் ; கொடுக்கும் போதுதான் நாம் பெறுகிறோம் ; மன்னிக்கும் போதுதான் ; மன்னிப்பை அடைகிறோம் ; இறக்கும் போதுதான் ; முடிவில்லா வாழ்வுக்குப் பிறக்கிறோம்.
ஆமென்.

தம்பதிகளின் செபம்

அன்புத் தந்தையே இறைவா,
எங்கள் குடும்ப வாழ்வை உமக்கு சமர்ப்பிக்கிறோம், எங்கள் கடந்த கால வாழ்வின் குறைகளை உணர்ந்து அவற்றை திருத்திக் கொள்ள உதவி புரியும். உண்மையான மகிழ்ச்சியையும், குழந்தை பாக்கியத்தையும் எங்களுக்கு அளித்தருளும். குடும்பத்தை நல்லதொரு குடும்பமாக மாற்றவல்ல இறை சிந்தனையும், அதற்கு உயிரளிக்கும் மெய்யான அன்பையும் எங்களுக்கு அளித்தருளும். குடும்ப வாழ்வை சிதைக்கும் தவறான புரிந்துகொள்ளுதல், நம்பிக்கை துரோகம், தீய பழக்க வழக்கங்கள் இவற்றிலிருந்து மீட்டருளும். குழந்தைகளை நேர்வழியில் நடத்தவும், வாழ்வின் கடமைகளை நிறைவேற்றவும் தேவையான திறமையும் பொறுப்புணர்ச்சியும் எங்களில் உருவாக்கும். நாசரேத்தூர் திருகுடும்பத்தைப் போல செபத்திலும், அன்பிலும், சகிப்புத் தன்மையிலும் பொறுமையிலும் எங்களை வளர்த்தியருளும். அன்பு இயேசுவே, நீர்தாமே எங்கள் குடும்பத் தலைவரும் மீட்பருமாக இருந்தருளும்.
ஆமென்.

குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்

இயேசுவின் திருஇருதயமே,
இக்குடும்பத்தையும் எங்கள் ஒவ்வொருவரையும் உமக்கு அர்பணிக்கிறோம். எங்கள் குடும்பத்தில் நீர் அரசராக ஆட்சி செய்யும். எங்களுடைய செயல்களையெல்லாம் நீர்தாமே பொறுப்பெடுத்துக்கொள்ளும். எங்களுடைய கடமைகள் அனைத்தையும் ஆசீர்வதியும். எங்களுடைய மகிழ்ச்சியை தூய்மைப்படுத்தும். வருத்தங்களில் ஆறுதல் தாரும். எங்களில் யாராவது உம்மைப் புண்படுத்த நேர்ந்தால் எங்களை மன்னியும். இக்குடும்பத்தினரையும், இங்கிருந்து அகன்றிருப்போரையும் நிறைவாய் ஆசீர்வதியும். இறந்துபோன எங்கள் குடும்பத்தினரை நித்திய பேரின்பத்திற்குள் நுழையச் செய்யும். விண்ணகத்தில் உம்மைக் கண்டு மகிழ எங்களுக்கு உதவி புரியும். ஆன்ம சரீர விபத்துகள் அனைத்திலிருந்தும் எங்களைக் காத்தருளும். மரியாளின் மாசற்ற இருதயமே, புனித சூசையப்பரே எங்களுடைய இந்த அர்ப்பணத்தை இயேசுவின் திரு இருதயத்திற்கு சமர்ப்பித்து வாழ்நாள் முழுவதும் இதன் அழியா நினைவை எங்களில் நிலைநிறுத்தியருளும்.
ஆமென்.

உணவருந்துமுன் ஜெபம்

சர்வேசுரா சுவாமி!
என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும்
-ஆமென்

உணவருந்திய பின் ஜெபம்

சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா! தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்; எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன். இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது.

வேலை துவங்குமுன் ஜெபம்

தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.
ஜெபிப்போமாக
சர்வேசுரா சுவாமி! விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்.

வேலை முடிந்தபின் செபம்

சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலும் நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்.

பிற்பகல் 3 மணிக்கு பொருத்தமான சிறு ஜெபம்

இயேசுவே! நீர் மரீத்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும், இரக்கத்தின் கடலுமாகவும், வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டு பிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே! உலக முழுமையும் உம்முள் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் இதயத்திலிருந்து இரக்கத்;தின் ஊற்றாக வழிந்தோடும் இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

ஆபத்தான வேளையில் அன்னையை நோக்கி ஜெபம்

நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்.

அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்

தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு,ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும், தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.

இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக ! நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இயேசுவை நோக்கி இரக்கத்திற்கான ஜெபம்

ஆண்வராகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும், மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும்.

தூய ஆரோக்கிய இயேசு பாலனிடம் மன்றாட்டு

இனிய இயேசுபாலனே, உம்மை நேசித்து ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன். எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர் என்னும் நம்பிக்;கையுடன் வருகிறேன். ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை. பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத் தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள் மனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள அன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர். உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து, "தந்தாய், இந்த கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆயினும் என் மனதின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்" என்று நீர் மரண அவஸ்;தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன். சிறுவர்களுக்கு உமது அரசைத்தருவதாக வாககளித்தீரே. சிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும். எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக. இவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன். உமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக. - ஆமென்.

குழந்தை சேசுவின் புதுமை நிறைந்த செபம்

அற்புத குழந்தை சேசுவே! அமைதி அற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம்.
(வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)
எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும், நீக்கி உம் குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உம் ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக! குழந்தை சேசுவே! என் செபத்தை ஏற்றருளும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - ஆமென். .

சதா சகாயமாதாவுக்கு புகழ்மாலை

உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர்திரு நாமம் உடைத்தான இடைவிடா சகாய மாதாவே, எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் ஆபத்தான வேளையில் நான் அதனை ஜெயம் கொள்ளும்படி . . . எங்களுடைய முழுமனதுடன் இயேசுவை நேசிப்பதற்கு . . . நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக்கியத்துக்கு உள்ளாவேனாகில் அதினின்று தப்பி சீக்கிரம் எழுந்திருக்கும்படி. . . பசாசின் ஊழியத்தில் ஈடுபடும் படியான சகாத தளையில் நான் சிக்கிக் கொள்வேனாகில் அத்தளையை தகர்த்தெறியும்படி . . . தீவிர பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் சீக்கிரம் ஞான உ:;ணம் கொள்ளும்படி . . . நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங்களைப் பெறுவதிலும் கிறிஸ்தவப் பக்திக்குரிய கடமைகளைப் பக்தியாய் செய்வதிலும் .. வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது . . . என் சீவியத்தில் வரும் துன்ப சோதனைகளிலும் . . . என்னுடைய சுபாவ துர்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், நன்னெறியில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும்படி நான் செய்யும் முயற்சிகளிலும் . . . என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய்கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என்பலம் குறைந்து போகும்போது . . . இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிட நான் கடைசி மூச்சை வாங்கி என் ஆத்துமம் என் சரீரத்தை விட்டுப் பிரியப் போராடும் போது . . . உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, ப+ஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி . . . ஓ! என் தேவதாயாரே என் கடைசிநாள பரியந்தம் என் கடைசி மூச்சு பரியந்தம் . . .
செபிப்போமாக
சர்வ வல்லமையும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்குத் துணைபுரியும் வண்ணம் ஆசர்வதிக்கப்பட்ட கன்னிமரியாவை உமது ஏகக் குமாரனுக்கு மாதாவாக்கத் திருவுளமானீரே! இவருடைய வேண்டுதலால், அடியோர்கள் பாவ கொள்ளை நோயைத் தீர்த்து பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதர் வழியாக எங்களுக்கு கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். -ஆமென்.

தூய அந்தோணியாரை நோக்கிபொது மன்றாட்டு

எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம். புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்;ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும். எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும். எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.

புனித மிக்கேல் தேவதூதருக்கு ஜெபம்

அதிதூதரான புனித மிக்கேலே, யுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும் பசாசின் பட்டனத்திலும் கண்ணிகளிலும் நின்று எங்களை காத்தருளும். இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுலகசேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீர்; ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுத்தித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தெய்வ வல்லமையைக் கொண்டு நரகபாதாளத்தில தள்ளிவிடும். - ஆமென்.

வல்லமை மிக்க செபம்

நெஞ்சுக்கும் மார்புக்கும் நிறைந்த சிலுவை! நீச பிசாசுகளை விரட்டிடும் சிலுவை - சிலுவை அடியில் தலையை வைத்தேன். திருவிரலால் உடலை வைத்தேன். எனக்கு உதவியாக வாரும் திருச்சிலுவை ஐயாவே! - ஆமென். குருசான குருசே! கட்டுண்ட குருசே! காவலாய் வந்த குருசே! தொட்டியிலும், தண்ணீரிலும், சிங்கார மேடையிலும், துன்பப்படுத்தும் பிசாசுகளையும், எங்களை அறியாமல் எங்களுக்குத் தீமை செய்கிறவர்களையும் துரத்தி விடும் சிலுவையே! மூன்றாணி! மூன்றாணி! மூன்றாணி!

புனித சூசையப்பருக்கு செபம்(1900 ஆண்டுகள் பழமையானது)

புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.
உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.
புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.

ஆலய சிறப்புகள்
  • நமது ஆலயத்தில் அன்னை மரியாளிடம் வேண்டி கேட்கும் வரங்களை அன்னை கனிவுடன் நிறைவேற்றுவார். குறிப்பாக கர்ப்பவதி பெண்கள் பலரின் கோரிக்கைகள் நிறைவேறியுள்ளது.

  • நமது ஆலயத்தில் அமைந்துள்ள "கோவை கல்வாரி" மற்றும் "நற்கருணை நாதர்" ஜெப கோபுரத்தில் காணிக்கையாக்கப்படும் இறைவேண்டல்களுக்கு ஆண்டவர் கருணையோடு செவிசாய்த்து பலன் கொடுக்கின்றார் என்பதை உணர்ந்து வேறு சபை மற்றும் மாற்று மத சகோதர சகோதரிகள் பலர் தினமும் வருகை புரிந்து செபிக்கின்றனர்.

  • நமது ஆலயத்தில் கர்ப்பிணி பெண்கள் பலர் ஆரோக்கிய மாதாவின் காட்சியை கண்டிருக்கின்றனர்

விவிலியம் வாசிப்பதன் அவசியம்

அன்பிற்கினியவர்களே திருவிவிலியத்தை ஒருமுறை முழுமையாக ஆழ்ந்த மனதுடன் படித்தால் நிச்சயமாக உங்களது அணுகுமுறைகள், வாழ்க்கை முறைகள், பிறரிடம் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் மிகப்பெரிய மாற்றமடையும் என்பதை உறுதியாக கூறுகின்றேன், ஏனெனில் இவ்வளவு காலம் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் எவையெல்லாம் கடவுளுக்கு ஏற்புடையதாகவும், எவையெல்லாம் கடவுளின் திருவுளத்திற்கு மாறாகவும் இருந்துள்ளது என்பதை அறிந்துவிடுவீர்கள். இந்த அறிதலின் மூலம் உங்கள் வாழ்வில் நிகழ்ந்த அனைத்து நன்மை, செல்வம், உதவிகள், ஏமாற்றம், இழப்பு, துரோகம், பிரச்சினைகள் ஆகியவற்றின் காரணத்தை அறிந்து கொள்வீர்கள். எனவே இனி வாழ்வின் ஒவ்வொரு நொடியும் எவ்வாறு அணுகவேண்டும் என்ற ஞானம் பிறந்துவிடும். விவிலிய வார்த்தை ஒவ்வொன்றின் வழியாகவும் ஆண்டவர் உங்களோடு பேசுவார். உங்களை வழிநடத்துவார்.

"ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. (சங்கீதம் 19:7)" "ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. (சங்கீதம் 19:8)" "ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. (சங்கீதம் 19:9)" "அவை (விவிலியம்) பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. (சங்கீதம் 19:10)"இதை விட விவிலியத்தின் சிறப்பை பற்றி கூற முடியாது எனவே இன்றே

"உம் கைகளே என்னை உருவாக்கின; என்னை வடிவமைத்தன; உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள எனக்கு மெய்யுணர்வு தாரும். (சங்கீதம் 119:73)" "உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். (சங்கீதம் 119:18)" "உம் ஊழியன்மீது உமது முகஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். (சங்கீதம் 119:135)" " முழுமனத்தோ;டு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளைவிட்டு என்னை விலகவிடாதேயும். (சங்கீதம் 119:10)" " பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். (சங்கீதம் 119:29)"என்று நமது ஆண்டவரிடம் மன்றாடி

"உம் நியமங்களைக் குறித்து நான் சிந்திப்பேன்; உம் நெறிகளில் என் சிந்தையைச் செலுத்துவேன்; (சங்கீதம் 119:15)" "உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன். (சங்கீதம் 119:16)" "ஆண்டவரே! இரவிலும் நான் உமது பெயரை நினைவு கூர்கின்றேன்; உமது திருச்சட்டத்தை கடைப்பிடிப்பேன். (சங்கீதம் 119:55)" "ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். (சங்கீதம் 119:33)"என்று உறுதியளித்து திருவிவிலியம் வாசிக்க ஆரம்பிப்போமாக.
ஆமென்.

இறையாசிருடன்
பங்குத்தந்தை
அருட்திரு I. சைமன் பீட்டர்.


விவிலியம் வாசிக்க இங்கே சொடுக்கவும்

  • முகப்பு
  • திருவிவிலியம்
  • செபங்கள்
  • மறைக்கல்வி
  • தொடர்பு

Jesus Church © 2019. ALL RIGHTS RESERVED.    |    Powered By Wisdom Ministries